Blog Archive

Friday 25 March 2011

எனது வாழ்க்கை விளக்கம் – 8 – III
15-06-1943 தேதிதான் திருமணத்திற்க் குறித்த நாள். அந்த நாள் வந்துவிட்டது. இரண்டாந் திருமணத்தைப் பார்க்க வேண்டுமென்ற விழைவில் எங்கள் சுற்றத்தாரும் நண்பர்களும், சுற்றுப்புறக் கிராமவாசிகளும் வந்து குழுமிக்கொண்டிருந்தனர். திருமணத்திற்கு முன் இரவே கூட்டம் அதிகம். லுங்கி வியாபாரம் தலையெடுத்து நன்றாக நடைபெறும் காலம் அது. பல ஊர்களில் எனக்கு ஒப்பந்த நெசவாளர்கள் இருந்தனர். திருமணநாள் காலையில் அவர்களெல்லாருமே வந்து குவிந்து விட்டனர். இரண்டாந் திருமணத்தில் முதல் மனைவிதான் தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் முதல் மனைவியின் ஒப்புதல் மீதுதான், இரண்டாம் மனைவி இல்லத்துக்கு வருகிறாள் என்பதைச் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மறைபொருள் விளக்கமே முதல் மனைவி திருமணத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்றும், அவள்தான் திருமாங்கல்யத்தை எடுத்துக் கணவன் கையில் கொடுக்க வேண்டுமென்றும், நமது முன்னோர்கள் இதை ஒரு சடங்காக வைத்துள்ளனர். இரண்டு பெண்களும், இருபுறத்திலும் உட்கார்ந்துதான் ஓமம் முதல் எல்லாச் சடங்குகளும் நடந்தன. வெளியிலிருந்து வந்து குழுமியிருந்த தாய்மார்கள், சகோதரிகள் எல்லோருக்கும் உள்ளத்தில் அடக்க முடியாத ஆவல். திருமாங்கல்யம் எடுத்து முதல் மனைவி, கணவன் கையில் கொடுக்கும்போது அவள் ஆற்றாமையால் கதறி அழுவாள். அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும். நாமும் சிறிது கண்ணீர் சிந்தி நமது அனுதாபத்தைத் தெரிவித்து மனச் சுமையை இறக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டிருந்து பல நாட்களாக இத்திருமண நாளை எதிர்பார்த்து வந்திருந்த தாய்மார்கள் கூட்டம் வரவர அதிகமாகியது. மற்றச் சடங்குகள் முடிந்து தாலி எடுத்துக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. புரோகிதர் சொற்படி எனது முதல் மனைவி திருமாங்கல்யத்தை மனதிடத்தோடு எடுத்தாள். என் கையில் கொடுத்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் என்னை நோக்கினாள். “துணிவோடு தாலி கட்டுங்கள். எல்லாம் நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்று சொல்லும் வீர உணர்ச்சி, அவள் பார்வையில் விளங்கிற்று. எனினும் நான்தான் கோழையாகிவிட்டேன். சிறிது கண் கலக்கம் ஏற்பட்டது. உடனே சமாளித்துக் கொண்டேன். இந்த நிலையில் நான் தோல்வி கண்டதற்கும் அவள் வெற்றி பெற்றதற்கும் காரணம் உண்டு என்பதைப் பின்னர் சிந்தித்து உணர்ந்தேன். அவள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி எண்ணி, உள்ளத்தைப் பண்படுத்தி வந்திருந்தாள். நான் பொதுவாக எதிர் காலத்தைப் பற்றிச் சிந்தித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திருமணத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறையிலான உளப் பயிற்சியால் அவள் பரீட்சை வந்த போது நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுவிட்டாள். பாடத்தை அக்கரையோடு படிக்காமல் பரீட்சையில் வினாத்தாள் கையில் வாங்கியவுடன் திகைப்புற்ற மன நிலையில், கைகள் உதறலோடு விடை எழுதத் துவங்கும் மாணவன் போல என் நிலை வந்துவிட்டது. கைகளில் சிறிது உதறல் எடுத்து, பொதுவாக நான் பெற்றிருந்த தவச் சாதனையால் இந்த நிலையைச் சமாளித்துக்கொண்டு கொட்டு மேளம் முழங்கத் திருமாங்கல்யத்தைச் சூட்டி விட்டேன்.
எனக்குத் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை. மாறாக ஒரு திகைப்பும், குற்றம் புரிந்துவிட்டது போன்ற மனப்பான்மையுமே இருந்தன. எல்போர்டு (L.Board) போட்டு கொண்டு, கார் ஓட்டும் கணவனோடு அந்தக் காரில் முதல் முதலாகக் கணவன் வற்புறுத்தல் மீது பயணம் செய்யும் மனைவியின் மனநிலை போல, ஒரு பயங்கர மனோநிலைதான் எனக்கிருந்தது. எனக்கும் என் முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட இரண்டாந்திருமண ஒப்பந்த சூழ்நிலைகளும், உண்மை விளக்கங்களும் வெளியே உள்ளவர்கள் உணர்வார்களா? செல்வச் செருக்கால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுகிறான் என்று சிலர் நினைப்பார்கள். அறியாமையால் இரண்டு பெண்களை மனைவியாக்கிக் கொள்கிறான் என்று சிலர் நினைப்பார்கள். பெண் உள்ளத்தோடு பெண் உள்ளம் ஊடுருவி இணைந்து பரிதாபம் கொண்டு, அவள் மீது இரக்கமும், என்மீது வெறுப்பும் சிலர் கொள்வார்கள். இவற்றையெல்லாம் முன்னமே பலதடவை சிந்தித்து உணர்ந்துதான் இருந்தேன், என்றாலும் திருமணத்தில் குழுமியிருந்தவர்கள் முகங்களை நான் கண்ட போது, அவர்கள் நேரில் என்னைப் பார்த்து அவ்வாறெல்லாம் உரையாடுவதுபோல இருந்தது. இத்தகைய சிக்கலான மனோநிலையில் எனது இரண்டாம் திருமண விழா நடந்தது.
எனது வாழ்க்கை விளக்கம் – 8 – IV
முதல் திருமண விழாவோடு இரண்டாந் திருமண விழாவை ஒப்பிட்டுப் பார்த்தால், முற்றிலும் வேறுபட்ட மனோ நிலைகள் எனக்கு அமைந்திருந்தன. வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் துய்க்கத் தொடங்கும் நாளாக அன்றிருந்தது. வாழ்க்கை இன்பங்களை விட்டுத் துன்பங்களை ஏற்கும் தொடக்க நாளாக இரண்டாம் திருமண நாள் அமைந்தது. பார்த்த நாடகமாக இருந்தால், அடுத்து வரபோகும் காட்சிகளும் பாத்திரங்களின் உணர்ச்சிகளும் இவ்வாறிருக்கும் என்று யூகித்து எதிர்பார்க்கலாம். இதுவரை பாராத, அதன் கதையமைப்பும் அறியாத நாடகம், எனது இரண்டாம் திருமணம், தாலி கட்டும் காட்சியில் கதாநாயகிகள், நாயகன் உணர்ச்சிகள் இவ்வாறு தான் அமையும், அவற்றை நேரில் காணலாம் என்று, பலவிதமான மனச் சோடனைகளோடு வந்திருந்த தாய்மார்கள், ஏமாந்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்களில் முட்டிக்கொண்டிருந்த நீர் வெளியாக வாய்ப்பே இல்லை. இந்தப்பெண் என்ன இம்மாதிரி ஏமாற்றி விட்டாளே என்ற வருத்தத்தில் தான் சில தாய்மார்கள் கண்களில் நீர் சிந்தியிருக்கலாம்.
எப்படியோ இரண்டாந் திருமணம் என்ற காட்சி, என் வாழ்க்கை என்ற நாடகத்தில் முடிந்துவிட்டது. வாசலில் பெரிய பந்தல் போட்டிருந்தும் இடம் கொள்ளவில்லை. அவ்வளவு பேருக்கும் உணவு அளித்தாக வேண்டும். பந்தி ஒன்றுக்கு 200 பேர் உட்காரலாம். பகல் 12.00 மணிக்குத் தொடங்கிய உணவளிக்கும் வேலை மாலை 4 மணி வரையில் முடிவடையவே இல்லை. பந்திக்குப் பரிமாறுவதில், நானும் எனது இலட்சிய மனைவி லோகாம்பாளும், நேரில் பங்கு கொண்டோம். எங்கள் பாடு சோர்ந்துவிட்டது. ஒருவாறு திருமணம் முடிந்துவிட்டது. எனது இரண்டாம் மனைவியின் பெயர் கண்ணம்மா, திருமணத்திற்கு முன்னமே அப்பெயரை மாற்றி விட்டோம். அவளுக்கு “இலட்சுமி” என்ற பெயர் சூட்டி விட்டோம். இந்தத் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட எனது வாழ்க்கை விளக்கங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரெண்டு கவிகள் மூலம் விளக்கியிருக்கிறேன்.
எது பண்பு
நீதி வழுவாது மக்கள் உழைத்து உண்டு
நித்திய அநித்தியத்தின் விளக்கம் பெற்று
ஆதிநிலை அறிவுநிலை யுணர்ந்து அன்பால்
ஆன்மீக நெறியில்பலர் வாழ்ந்த நாட்டில்
சாதி, மொழி, நாடு, வெறி இவற்றின் மூலம்
தங்களையே உலக மக்களிடமிருந்து
பேதித்துப் பிரிவு பிரிவாக்கிக் காணும்
பித்து ஒருபெரிய களங்கமன்றோ ஆய்வீர்
நீங்களும் இதுபோலாகலாம்
அழுக்காறு அவா வெகுளி
கடுஞ்சொற்கள் எனும் நான்கு வேண்டாவற்றை
அத்தனையும் மாற்றிவிட்டுத்
தூய்மைப் பேறடைந்தபயன் அறிவறிந்தேன்
பழுத்தமனம் அருளாற்றல்
கணம் மறவா விழிப்புநிலை பிறழ்வதில்லை
பண்பட்டதென எண்ணம்
சொல், செயல் இவை விளைவாய் நலம் காண்கின்றேன்
ஒழுக்கமுடன் கடமை பிறர்க்
குதவி செய்யும் ஆற்றலிவை வாழ்வில் ஓங்கி
ஒளிவீசிப் பாருலக
மக்கள் நலநாட்டத்தில் தொண்டானானேன்
முழுத்திறமை வளர்கிறது
கொடுப்பதென்றிக் கேட்பதில்லை எதிர்ப்பார்ப்பில்லை
முதிர்ந்து வரும் அறிவு
சிவக்காட்சியென உள்ளுணர்ந்து நிறைவாயுள்ளேன்
எனது வாழ்க்கை விளக்கம் – 9 – I
இரண்டாவது திருமணம் நடைபெற்ற பிறகு எனக்குக் குடும்ப வாழ்க்கையில் பொறுப்பு மிகுந்துவிட்டது. இரண்டு பெண்களின் உள்ளங்களையும் ஊடுருவி ஆராய்ந்துதான், ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். தன்னைப் புறக்கணித்து நான் எந்தச் செயலையும் புரிவதாக, இருவரில் ஒருவர் கூட நினைத்துவிடக்கூடாது. அத்தகைய கருத்து உருவாகிவிட்டால், பின்னர் அதனை ஒழுங்கு செய்வது கடினம். எனவே, மிகவும் விழிப்போடு ஒவ்வொரு செயலையும் செய்வேன். பரம் பொருளிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்பது, ஒரு தெளிவான விளக்கம். ஆயினும் உயிர்கள் அனைத்துமே பெண் குலத்தினிடமிருந்து தோன்றின என்ற விளக்கம் எனது சிந்தனையில் முதலிடம் பெற்றது. எனவே, நான் பெண்களை மிகவும் மதிப்போடு நடத்திவந்தேன். இந்தக் கருத்தை ஒட்டியே உலக சமாதானம் என்ற நூலில்.
பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்வே றென்ன
பெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு?
என்ற கருத்து ஒரு கவியில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். ஒருவர் மனமும் நோகாமல் வாழ்வை நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு குடும்பத்தை நடத்தினேன். லுங்கி வியாபாரம் அப்போது நாளுக்கு நாள் மேலோங்கியது. வெளியிலே சாயம் தீர்த்து நூல் கொண்டுவருவது மிகவும் தொந்தரவாக இருந்தது. ஆகவே, ஒரு சாயத் தொழிற்சாலையையும் ஏற்படுத்திக் கொண்டேன்.
நான் அடைய விரும்பிய இலட்சியங்களில், வறுமையில்லா வாழ்வும் ஒன்று. எனது வறுமை ஒழிந்துவிட்டது. தேவைக்கு மேலாக வருவாய் பெருகிவிட்டது. மாதம் ஒன்றுக்கு லுங்கி விற்பனை, ஒன்றேகால் இலட்சம் ரூபாயை எட்டியது. இதனால் என் அளவில் வறுமை ஒழிந்து போயிற்று. ஆனால் என் போன்று வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் வறுமை ஒழிய வழி என்ன? இந்தச் சிந்தனை ஓங்கியது. முதலில் என்னிடம் தறி வேலை செய்யும் தொழிவாளர்களின் வறுமையை நீக்க வேண்டும். முதலில் செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் இதுவே. எனவே, தாராளமாகக் கூலியைக் கொடுத்தேன். பிறகு ஆண்டுதோறும் நிகர லாப வருவாயில் 25% போனசாகக் கணக்குப் போட்டு, நெசவாளர்கள் எல்லோருக்கும் கொடுத்து வந்தேன். நெசவாளர் மனைவி குழந்தை பெற்றால், உடனடியாக ரூ.15/- இனாமாக வழங்கும் ஏற்பாடும், தாயோ தந்தையோ இறந்துவிட்டால், ரூ.25/- இனாமாக வழங்கும் ஏற்பாடும் செய்தேன்.
நெசவுத் தொழிலையும் துணி விற்பனையையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டேன்.
அவை இந்தக் கவிகள் மூலம் விளங்கும்:-
“ஆடைகளைத் தோற்றுவிக்கும் பணியில் கண்ட
அனுபவமும் திறமையும் கொண்டெல் லோருக்கும்
கோடையிலும் குளிரினிலும் உடுத்திக் கொள்ளக்
குறைந்த விலையில் நல்லதுணி வகைகள்
ஊடை வலுபாவு வலு பொருத்தம் பார்த்து
ஒத்துநெய்து சரி அகல நீளம் வைத்துக்
கூடை சுமப்போனுக்கும் செல்வர்கட்கும்
குறித்த விலைவிற்கும் ஒருபணியைச் செய்வேன்.”
“விற்பனையில் ஒத்துழைக்கும் எவர்க்கும் லாப
விகிதத்தில் பெரும்பாலும் குறைந்திடாமல்
சிற்பிகளைப் போலறிவைப் புலன்களோடு
சேர்த்தொன்றித் தொழிலாற்றும் நெசவாளர்கள்
அற்புத செய்கைக் கேற்ற கூலி தந்தும்
ஆடைகள் நெய்தே விற்கும் மற்றையோர்கள்
கற்பனையாலும் என்னால் நட்டம் காணாக்
கருத்துடனே உடுத்துபவர் திருப்தி காண்பேன்.
இவ்வாறு கொள்கையை வகுத்துக்கொண்டு தொழிலை நடத்தி வந்தேன்.
மூன்றாவது ஆசான்
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் “பரஞ்ஜோதி” என்பவர் சென்னையில் ஒரு ஞான சபை அமைத்தார். அவர் தீட்சை முறையைப் பற்றி ஒரு நண்பர் என்னிடம் விளக்கினார். உடனே நான் அங்கு சென்று விசாரித்து அச்சபையில் உறுப்பினராகி விட்டேன். அவர் விளக்கியது குண்டலினியோக தீட்சை முறைதான். சாந்தியோகமென்னும் இறங்குபடிமுறை அவரிடம் ஒரு சிறப்பான பயிற்சி. ஒழுங்கான முறையில் தீட்சை பெற்றுச் சிந்தனையோடு பயின்றேன். என் மனதிற்கு ஒத்ததாக இருந்தது. இதுவரையில் யானறிந்திருந்த தத்துவ விளக்கம் தியான முறை இவற்றோடு இதை இணைத்து ஆராய்ந்து வந்தேன். பல அன்பர்கள் அச்சபைக்கு வருவார்கள். அவர்களில் பலர் எனக்கு நண்பர்களாயினர். எனது கருத்துக்களை விளக்குவதற்கும், கூட்டாகத் தவம் பயில்வதற்கும், பரஞ்ஜோதி சுவாமிகளின் ‘உலக சமாதான ஆலயம்’ என்ற ஞானசபை பொருத்தமாக இருந்தது.
இரண்டாம் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. குழந்தைப் பேறு இல்லை. எனக்கு குழந்தை இல்லையே என்ற கவலை சிறிது கூட இல்லை. ஆயினும் என் மனைவிகட்கு மட்டும் கவலை அதிகம். இரண்டு பெண்களை ஒருவர் மணம்செய்து கொள்வது கூடாது என்பது, எனது முடிவுதான் என்றாலும், நானே அந்தப் பாவத்திற்கு ஆளாகி விட்டேன். ஆனால் என்னைப் பார்த்து மற்றவர்கள் இதே தவறைப் புரியக் கூடாது என்று எண்ணினேன். இந்த எண்ணத்தில் என் அனுபவங்கள் அனைத்தும் கூடி “இரு தாரம்” என்ற தலைப்பில் பன்னிரண்டு கவிகளாக உருவாயிற்று.
அவற்றைக் கீழே படியுங்கள்.
முதல் மணம்
“உத்தமியாள் அறிவுடடையாள் பதியாய் என்னை
உவந்தேற்றாளை மணந்து நலமாய் வாழ்ந்தேன்.
பத்துவருடம் கழிந்தும் குழந்தை இல்லை
பக்திநிலை அக்காலம் எங்களுக்குப்
புத்திரனில்லா தோர்கள் பாவி என்று
புனைந்த கற்பனைக் கதைகள் படித்ததோடு
நித்தம் அதனைச் சுட்டிக்காட்டி உற்றார்
நிந்திக்கும் சொற்களையும் கேட்டு நொந்தோம்.”
“பெண்குலத்தின் இரத்தினமாம் என்மனைவி
பெரும்அளவில் துன்புற்று என்னைநோக்கிக்
கண்கலங்கி “நீங்கள் மற்றும் ஒருபெண் தேடிக்
கல்யாணம் செய்தாக வேண்டும், இன்றேல்
பண்பறியா மனிதர்பலர் இழித்துக் கூறும்
பழிப்புரைகளைக் கேட்டுச் சகியேன்? என்றாள்.
புண்பட்ட என்நெஞ்சம் மேலும் புண்ணாய்ப்
பொறுத்திருநீ ஓர் ஆண்டு என்று சொன்னேன்.”
எங்கள் கருத்து
“பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லை
பெருநெருப்பு சாகளவும் துக்கம்” என்ற
பண்டைமொழி ஒரு ஆண்டு தினமும் பாடிப்
பார்த்திடுவேன் அவளை மனம்மாற்ற எண்ணி;
அண்டை அயலார் உற்றார் நிந்தைகேட்டு
அலுத்திருக்கும் அவளுக்கோ அமைதியில்லை;
“சண்டைவரும் என நீங்கள் எண்ண வேண்டாம்
சகல துறையிலும் ஒத்துவாழ்வேன்” என்றாள்.
மனிதன் இயல்பு
“இன்பமே எல்லோரும் விரும்புகின்றோம்
எப்போதும் கற்பனையால் பெரும்பாலோர்கள்
துன்பமே தோற்றுவிக்கும் செயல்கள் செய்து
துயரடையும் மனிதஇன இயல்புக் கேற்ப
அன்புருவாம் முதல்மனைவி அருகிருக்க
அடுத்து ஒருபெண்ணை மணம்செய்து கொண்டேன்
இன்றுவரை முன்னவள் சொல் மீறவில்லை
எனினும் பின்வந்தாட்கப் பொறுப்பு ஏது?”
வாழ்க்கைப் பளுவும் பொறுப்பும்
“பெரும்பளுவை வாழ்க்கையிலே ஏற்றுக்கொண்டேன்
பெண்கள் இருபேர்களது உள்ளத் தூறி
வரும்வேக உணர்ச்சிகளைக் கூர்ந்துநோக்கி
வாழ்க்கையிலே அவ்வப்போ கடமையாற்றத்
துரும்பசைக்க நினைத்தாலும் உயர்வு தாழ்வு
தோற்றாத முறையினிலே எண்ணிச் செய்வேன்
அரும்நண்பர் உற்றார்கள் எங்கள் வாழ்வில்
அமைதிகண்டு மனநிறைவு கொள்ளும்வாறு.”
கவலையில் மாற்றம்
“மற்றும்ஒரு பத்தாண்டு கழிந்து போச்சு
மனைவிகட்கு யானும் எனக்கவர்ளன்றி
பெற்ற குழந்தை வேறுஇல்லை இப்போ
பேசுவது எதைப் பற்றி? பெண் ஒருத்தி
மற்றவளுடன் ஒத்துவாழ வென்றால்
மணாளனெனும் பொறுப்புடையான் அனுபவத்தில்
கற்றவித்தை மற்றும் ஒருசமயம் ஒவ்வா
கணத்திற்கு கணம் புதியநிலைமை தோன்றும்.”
இந்தியப் பெண்களின் உயர்ந்த நீதி
“சிந்தனையில் உயர்வான மனித வர்க்கம்
சிறப்பாக மதிக்கும் பலபொருட் களுண்டு
இந்திய நாட்டில் பிறந்த பெண்களுக்கோ
இல்வாழ்வில் கணவனிலும் உயர்ந்ததான
எந்தப் பொருளும் இல்லையெனில் ஓர்பெண்ணின்
எண்ணத்தில் எத்தகைய புயல் உண்டாகும்
பந்தத்தால் உடலுயிர்கள் ஒன்றுபட்ட
பதியையே மற்றும் ஓர்பெண் பங்குகொண்டால்.”
மேல் தோற்றத்தால் ஏமாறாதீர்
“எத்தனையோ சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால்
இரண்டு மனைவிகள் கொண்டோர் பல பேர் உண்டு
பத்து குடும்பம் தேர்ந்து வாழ்க்கை ஆய்ந்தால்
பல விதத்தும் அவர்கள் படும்பாடு காண்பீர்
சொத்தை பல உள்ளிருக்கும் வெளித் தோற்றத்தில்
சுகமே கற்பனை செய்து ஏமாறாதீர்
ஒத்து வந்தால் மூவருள்ளும் வாழ்நாள் எல்லாம்
உலக அதிசயங்களிலே அதுவும் ஒன்றாம்.”
அறிவின் ஒளி
“இரண்டாம் பெண் கொண்ட சில நாட்களுக்குள்
எனக்கு உள்ளுணர்வு நிலை விளங்கிப் போச்சு
மிரண்ட அறிவின் நிலையில் சோதி யான
மின்னலைப் போல் ஒளிகண்டேன் அறிவறிந்தேன்
புரண்டு வரும் இன்பதுன்ப வெள்ளம் தாங்கும்
பொறுமை யெனும் கடலானேன் உலகில் வாழ்ந்து
திரண்ட அனுபவங் கடமை முதலாய்க் கொண்டு
தெளிவுடனே வாழ்முறை வகுத்துக் கொண்டேன்.’
எனக்கமைந்த சூழ்நிலைகள்
“சுருங்கச் சொன்னால் எனக்கு அமைந்த நல்ல
சூழ்நிலைகள் பல அதனால் இரண்டு பெண்கள்
நெருங்கி உறவாடி ஒரு குடும்பமாக
நேசித்து வாழ்கின்றார் ஒவ்வோர் வேளை
இரும்பொத்த என் மனமே சலனங்கொள்ள
ஏற்ற மனக்கலக்கமுறும் நிகழ்ச்சி தோன்றும்
வருங்காலத் தவர்களுக்கு விழிப்பை ஊட்ட
வாழ்ந்து கண்ட அனுபவமாய் இதைச் சொல்கின்றேன்.”
சட்டத்திலும் பொத்தல்
“ஒருவர் இருமனைவிகளைக் கொள்ளும் செய்கை
ஒவ்வாது சட்டத்தால் எனினும் என்ன?
பெருமை படத்தக்க இந்த நாட்டின் பெண்கள்
பெற்றவர்கள் உற்றார்கட் கெதிர்ப் பென்றாலும்
அருமைக் கணவன் விரும்ப மற்றோர் பெண்ணை
அவனுக்கு மணம் முடித்தும் கடமை செய்வார்
வரும் தொல்லை வாழ்நாட்கள் முழுதும் ஏற்பார்
“வாதி” யார் அவளைவிட? சட்டம் எங்கே?”
எச்சரிக்கை
“பிள்ளைகளைப் பெற்றெடுத்தோர் வாழ்வில் காணும்
பெருந்துன்பம் நன்கறிவார் எனினும் இல்லாச்
சள்ளை இலாமல் வாழக் கண்ணால் பார்த்தும்
சலன புத்தியுடன் சொல்வதெல்லாம் கேட்டு
உள்ளத்தில் உறுதிகுலைந்திரு பெண் வாழ்வில்
ஒருவருமே மனைவிகளாய்க் கொள்ள வேண்டாம்
முள்வேலிக்கிடை நடக்கும் போக்கை ஒக்கும்
மூச்சுள்ள வரை துன்பம் எச்சரிக்கை!”
இந்தக் கவிகள் பன்னிரெண்டும் எழுதி முடித்த மறுநாள் எங்கள் இல்லத்திற்கு ஓர் அன்பர் வந்தார். அவர் அனந்தபுரத்திற்கு அடுத்த பனைமலைப்பேட்டைவாசி. அவர் பெயர் தண்டபாணி செட்டியார். இரவு சாப்பாடு முடிந்தவுடன் என்னுடன் ஏதோ பேச முயன்றார். அப்போது இந்தக் கவிகளைப் படித்து முடித்து விடுங்கள். பிறகு பேசலாம் என்று எழுதி வைத்திருந்த கவிகளைக் கொடுத்தேன். அவர் என் கவிகளைப் படித்துப் பொருளுணர்ந்து இரசிப்பவர்களில் ஒருவர். எப்போது வந்தாலும் நான் எழுதிய கவிகளைப் படித்து விவாதித்துவிளக்கம் பெறுவது வழக்கம். அந்த முறையில்தான் “இருதாரம்” என்ற தலைப்பில் உருவான கவிகளையும் படிக்கக் கொடுத்தேன். படித்தார்; ஆழ்ந்து சிந்தனை செய்தார். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தது போல கவிகளை என்னிடம் கொடுத்து, இது பலர் வாழ்வைத் திருத்தி அமைக்க உதவும் என்று சொன்னார். பிறகு ஏதேதோ சிறிது நேரம் பேசிவிட்டு அவர் படுக்கப் போய்விட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் ஊருக்குப் போய்விட்டது தெரிந்தது. அவர் வந்தவுடன் திரும்பிப் போவது கிடையாது. எங்கள் கம்பெனிக்கு அவர் மூலம் அறுபது தறிகள் பனைமலைப்பேட்டையிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் நெய்து வந்தன. அவர் நூல் பாவு, பணம் வாங்கிக் கொண்டுதான் போவார். அவர் உடனே திரும்பிப் போய்விட்டது எனக்கு வியப்பாக இருந்தது… எனது தம்பியிடம் மாத்திரம் சொல்லிவிட்டுப் போனது தெரிந்தது. முக்கியமான ஒரு குடும்ப விஷயத்தைப் பற்றிப் பெரியவரிடம் ஆலோசனை கேட்க வந்தேன். அவரிடமிருந்து பதில் கிடைத்துவிட்டது. வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனது தம்பி இந்தச் செய்தியைச் சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னை அவர் குடும்ப விஷயமாக ஏதும் கேட்கவில்லையே என்று கூறினேன்.
இரண்டு நாட்கள் பொறுத்து அவரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. “எனது தாய் தந்தையர் எனக்கு இரண்டாம் திருமண ஏற்பாடு செய்திருந்தார்கள். பிள்ளையில்லாக் குறையைப் போக்க, அவர்கள் அவ்வேற்பாடு செய்தனர். அதுபற்றி உங்களைக் கேட்டு கருத்தறிந்த பிறகு பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு, உங்களிடம் வந்தேன். நான் உங்களைக் கேட்கக் கூட இல்லை. அதற்குள் நீங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரண்டு கவிகளைப் படிக்க கொடுத்தீர்கள். அதைப் படித்த பின்னர் எனக்குப் போதிய பதில் கிடைத்து விட்டது. இது தெய்வச் செயலாக எனக்குத் தோன்றியது. வீட்டுக்கு வந்தவுடன் திருமண ஏற்பாட்டை ரத்து செய்து விட்டேன். என் மேல் என் பெற்றோர்கட்குச் சிறிது மனவருத்தம்தான். ஆயினும் அவர்களைச் சமாதானப்படுத்தி விட முடியும். என்னை நல்ல சமயத்தில் விழிப்பூட்டிக் காப்பாற்றி விட்டீர்கள்” என்று, கடிதத்தில் குறித்திருந்தது. எனக்குத் தாங்கொணா மகிழ்ச்சி. இந்தக் கவியை அச்சடித்துப் பலருக்குக் கொடுத்தால் நல்லது என்று எண்ணி இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டேன்.
எங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து என் தம்பிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவது மாதம் அதன் தாய்க்குக் கடினமான நோய் கண்டுவிட்டது. அப்போது குழந்தையை வளர்க்கும் பொறுப்பை எனது இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் அந்தக் குழந்தையை நாங்களே வளர்த்து வருகிறோம். என் மனைவிகட்குப் பிள்ளையில்லாக் குறையை நீக்கிய அந்தப் பெண் செல்வத்தின் பெயர்தான் ஞானாம்பிகை. மிக்க கூர்மையான அறிவு அவளுக்கு. அதை நன்றாக விளங்கிக் கொள்ள அவளுக்குப் பத்து வயதில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரத்தை அடுத்த இதழில் விளக்குகிறேன்.
மனமாற்றம் வேண்டும்
நாசவழி போகாமல் உலக மக்கள்
நல்வாழ்வை யடைந்தமைதி காணவென்றால்
தேச மத சாதி மொழி இன பேதங்கள்
தனிஉடமைப் பற்றொழிய வேண்டும் ஆண்பெண்
நேச உடல் உறவினிலே களங்கமற்ற
நெறிநிலைக்கும் சூழ்நிலைகள் அமையவேண்டும்
பாசமென்ற மனமயக்க பழக்கம் விட்டு
பண்புடனே வாழவழி காணவேண்டும்.
பதினாறு பேறு
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் அறம் வாழ்க்கைத் துணைநலம் இளமை
அறிவு சந்தானம் வலிதுணிவு ஆண்மை வெற்றி
ஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.
மனிதன் மதிப்பு
திறம்பல பெற்றும் சிறப்புள விஞ்ஞானத்தால்
அறம்தவம் இரண்டுமின்றி அறிவது குருடாய்ப் போச்சு
புறம் அகம் ஒழுக்கமின்றி பூவுலகெங்கும் பல்லோர்
மறந்திட்டார் மனிதன் என்ற மதிப்பையே மயக்கம்துன்பம்.
சிக்கல் அகற்ற
சீர்திருத்த முறையினிலே காலத்திற்கேற்ப
சிக்கனத்தை வாழ்க்கையிலே செயலாக்கி உய்ய
சிந்தனையைப் பேரியக்கத் தொடர்களத்தில் செலுத்தி
சிக்கல்களை யகற்றி மெய்யறிவு பெறச்செய்வோம்.
சமாதானம் காண்போம்
அலைஅலையாய் பெருக்கெடுக்கும் அறிவுவெள்ளம்படுத்தித்
தலையாய நம்சக்தித் தரமுணர்ந்துப் பொதுநிதியாம்
கலைகள்தமை விலையாக்கும் காலத்தை மாற்றிவிட்டு
நிலையான சமாதானம் நிலஉலகில் நாம்காண்போம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 10 – I
வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும். உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து கிளைக்கும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களும் ஆகும். உடலை விட்டு உயிர் பிரிந்தால் அதோடு அந்த மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடுகின்றன. எனினும் சமுதாயக் கூட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களில் வேறு பலர் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்துவிட்டாலும் அவனோடு பின்னப்பட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும். சிக்கலில்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில், எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்கள்தான் இதற்கு விதிவிலக்கு.
ஒரு மனிதனுக்குப் பசி, வெப்ப தட்ப ஏற்ற உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் இவையே அவ்வப்போது தோன்றிக் கொண்டிருக்கும் இயற்கை வழி வந்த சிக்கல்கள். இவற்றிற்கு இயற்கை வளம், அறிவு வளம், உடல் வளம் என்ற மூன்றும் கூடினால், முறையாகக் காலா காலத்தில் இயற்கைச் சிக்கல்களைப் போக்கிக் கொள்ளலாம். புலன் கவர்ச்சியில் வாழும் மனிதனுக்குத் தன்னை மறந்து அளவு மீறியும் முறை மாறியும் செயலாற்றும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாழ்வில் சிக்கல்கள் செயற்கை முறையில் – அறிவின் குறையால் உணர்ச்சி வயப்பட்டு ஆற்றும் செயல்களால் பெருகுகின்றன.
தன் இயற்கையான தேவைகட்கு இன்றியமையாத பொருள்களையும் வசதிகளையும் மாத்திரம் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் சிக்கல்கள் இருப்பதே தெரியாது. தினசரி வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு ஒரு மனிதன் வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகுகின்றன. தனது பாதுகாப்பில் வாழக்கூடிய மக்கள் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு அச்சிக்கல்கள் மேலும் பலமடங்கு பெருக்கமடைகின்றன. இவ்வளவையும் அறிந்த மனிதன்தான், சிக்கல்களை வளரவிடாமல், இருக்கதும் சிக்கல்களை நுட்பமான முறையில் போக்கிச்கொண்டு, தெளிவோடு வாழ்வான்.
எனது வாழ்க்கை விளக்கம் – 10 – II
என் வாழ்விலும் இத்தகைய முறையில் உருவான சிக்கல்கள் பல. அவற்றில் மக்கட்பேறு இல்லாமையும், அதன் காரணமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டதும், எவ்வளவோ சிக்கல்களைப் பெருக்கி விட்டன. எனினும் நான் சிந்தனையில் ஆழ்ந்து தத்துவ விளக்கம் தெளிவாகப் பெற்றபின் அச்சிக்கல்களை எதிர்த்து எளிதில் வெற்றிபெற முடிந்தது. முதலில் மக்கட்பேறு இல்லாத குறை இருந்தது. அது நாளுக்கு நாள் மறந்தே போய்விட்டது. மேலும் மக்கட் பேறின்மையும் எக்காரணத்தால் என்ற சிந்தனையில் ஆழ்ந்த போது எனக்குச் சில விளக்கங்கள் கிட்டின. மக்கட் பேரின்மைக்கு மூன்று காரணங்கள் உண்டு. (1) இளமையில் திருமணம் மறுத்து சன்யாசம் கொள்ளுதல் (2) உடல்நலக் கேட்டினால் விந்து கெட்டுப் போய்விடல் (3) வினைகள் கழிக்கப் பெற்றுப் பரம் பொருளோடு உயிர் இணைந்து நிற்கும் தவம் சித்தி. இவற்றில் மூன்றாவது காரணத்தால்தான் எனக்குக் குழந்தை பிறக்கவில்லையென்பதைத் தெளிவாக உணர்ந்தேன். என் சிறுவயதில் அடிக்கடி பஜனைக்குச் செல்வேன். அங்கு தாயுமானவர் பாடல்களில் ஒன்றான “அங்கிங்கெனாதபடி” என்று தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தக் கவியில் பொருளுணர்ந்து அதே நிலையில் ஆழ்ந்து நின்று விடுவேன். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னும் அப்பாடலை மனனம் செய்து இரசிப்பேன்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீந்தார்
இறைவனடி சேராதார்.
“வீழ்நாள் படா அமைநன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங்கல்.”
என்னும் வள்ளுவர் கருத்துக்கு ஒப்ப எனக்கு அடிக்கடி மெய்ப் பொருளோடு இணைந்து இலயமாகும் பேறு, சிறுவயது முதலே கிடைத்தது. ஆயினும் அதைத் தெளிவாக விளக்கம் பெறப் பல ஆண்டுகள் சென்றன. செயல்களிலும் ஒழுக்கம் பிறழாத அறவழியே செயலாற்றி வாழ்ந்தேன். கடவுளைச் சேர்ந்து முக்தி பெறவேண்டும் என்பதே, சிறுவயது முதல் ஏற்பட்ட அவா. இக்காரணங்களால் பிறவிக்கு உரிய தொடர்பு அறுந்துவிட்டது. மேலும் விந்தின் மூலம்தான் பிறவித்தொடர் என்ற விளக்கமும் கிடைத்த பின்னர், எனக்குக் குழந்தை இல்லைேயே என்ற குறை அறவே அற்றுப் போயிற்று. என் மனைவிகட்கும் ஞானாம்பிகையை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், ஓரளவு குழந்தை வேட்பு அடங்கி விட்டது. அவர்கள் ஆசைகளை யெல்லாம் குடும்பத்திற்கு ஒரே குழந்தையாக வந்த செல்வப் பெண் ஞானத்தை வளர்ப்பதில் திருப்பி விட்டார்கள். அவளைக் காலத்தோடு பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தோம். அவளுக்கு வயது பத்து இருக்கும். அப்போது ஒரு நாள் அவள் எனது நண்பர், அருட்செல்வர் திரு. ஆ. சொக்கலிங்கம் என்பவரை ஒரு கதை சொல்லும்படி கேட்டாள். அவர் மிகவும் அன்போடு திருவள்ளுவர் கதையை எடுத்துச் சொன்னார். அந்தக் கதையில் மணலைச் சோறாக்கி படைத்தார் வாசுகி. அதனால்தான் அவள் பெருமையுணர்ந்து அவளைத் திருவள்ளுவர் திருமணம் செய்து கொண்டார் என்று கதைப் போக்குப்படி என் நண்பர் கூறினார். பொறுமையோடு இதுவரையில் கேட்டுக் கொண்டிருந்த ஞானம். இங்கு சொக்கலிங்கம் அவர்களைக் குறுக்கிட்டாள். நீங்கள் சொல்வது பொய்க்கதை. மணலை எப்படி சோறாக்க முடியும்? அது முடியாத காரியம். ஆகவே, இந்த மாதிரி பொய்யான கதையை ஏன் சொல்லுகிறீர்கள்? என்று இடைமறித்து வினவினாள். நண்பர் ஏதேதோ சமாதானம் கூறிப் பார்த்தார். ஏற்கவே இல்லை. அந்த வேளையில் நான் அங்கு வந்தேன். உடனே நண்பர் என்னைப் பார்த்து என்னங்க திருவள்ளுவர் கதையைச் சொன்னேன். அதில் வரும் மணலைச் சோறாக்கும் நிகழ்ச்சி பொய் என்று கூறி வாதம் செய்கிறாள் ஞானம். நீங்களாகிலும் கொஞ்சம் அவளுக்குச் சமாதானம் கூறுங்கள் என்றார். உடனே நான் அவர்களோடு உட்கார்ந்தேன். கதை உண்மைதானம்மா. ஆனால் கருத்து அதில் மறைக்கப் பெற்றிருக்கிறது என்ற அந்த மறைபொருளை அவள் விளங்கிக் கொள்ளுமாறு உணர்த்தினேன். அவளுக்கும் நிறைவு ஏற்பட்டது. நண்பரும் மனமாற்றம் அடைந்தார். இரண்டு நாட்களில் அந்த நிகழ்ச்சிகள் ஐந்து பாடல்களாக உருவாயின. அவற்றைப் படியுங்கள்.
எனது வாழ்க்கை விளக்கம் – 10 – III
பகுத்தறிவு வாதம்
“எனது மகள் ஞானமெனும் சிறுமி ஓர்நாள்
என் நண்பரை நோக்கிக் கதை சொல்லென்றாள்
மனது மிக உற்சாகம் கொண்ட வட்கு
மாமுனிவர் வள்ளுவர் கதையைச் சொன்னார்
உனது கதை சரியில்லை மணலைச் சோறாய்
ஒருவருமே சமைக்கு முடியாதென்றாள் பின்
நினது கருத்தென்னென்று என்னைக் கேட்டாள்
நீதிபதி பொறுப்பேற்றேன் இருவர் முன்னே. “
அறிவின் திறனால் உணர்த்திய காதல்
“உத்தமியாள் அறிவுடையாள் பதியாய்த் தன்னை
உவந்தேற்பாள் ஒருவளைத் தேர்ந்திட வள்ளுவர்
பித்தனைப்போல் மணல் முடிச்சுடன் திரிந்தார்
பேரறிவால் வாசுகி யூகித்தறிந்தாள்
வித்தையெனப்பலர் முன்னே மணல் கைக்கொண்டாள்
வீசியெறிந்தாள் மறைவில் அரிசிச்சாதம்
சித்தம்மகிழ்ந்தே படைத்துச் சூழ்ந்தோர்க் கெல்லாம்
சிந்தை நிலையறிவித்தாள் எனநான் சொன்னேன்.”
நண்பர் சிந்தனை
“இப்படித்தான் அந்தகதை இருக்க வேண்டும்
ஏன்அதனை மாற்றிவிட்டார் என்றார் நண்பர்
ஒப்பற்ற உயர்வான அறிவின் ஆற்றல்
உடையவர்களில் கூட பலபேர் இன்று
எப்போதும் கற்பனையில் ஆழ்ந்து ஆழ்ந்து
இன்பமடையும் பழக்கம் கொண்டுள்ளார்கள்
அப்படியே அவரவர்கள் போக்குக் கேற்ப
அறிவிற்கு விருந்தளிக்கும் தொண்டீதென்றேன்.”
மனங்கவர வியப்பூட்டல்
“அணுவினிடம் பரிணாமம் ஈர்ப் பியக்கம்
அறிந்து விட்டோர் பெருகிவிட்ட காலம்ஈது
அணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்து விட்டோம்
அரிசியின்றி சோறாக மணல் மாறாது
அணுஞானம் இன்னதென்றே தெரியா தோர்கள்
அறிவிற்கு வியப்பூட்ட விருப்பம் கொண்டோர்
அணுதத்துவத்திற்கே முரணாய் அந்நாள்
அனேக கதைகளை இதுபோல் செய்தார் என்றேன்.”
நண்பர் முடிவு
“பத்துவய துடைய சிறுபெண் தொடுத்த
பகுத்தறிவு வாதத்தைக் கேட்டேன் இன்று
இத்தனைநாள் வரையில் இந்தக் கதையின் நுட்பம்
என்னவென்று ஆராயப் புகுந்தேனில்லை
எத்தனையோ கதைகளில் வரும் இதனைப் போன்ற
இயற்கைக்கு ஒவ்வாத நிகழ்ச்சி நம்பும்
தொத்து நோய் தனிலிருந்து தெளிவு காணும்
துணிவுஇன்றே பிறந்து விட்டதென்றார் நண்பர்.”
இந்தக் கதையில் ஒரு நுட்பம் இருக்கிறது. வள்ளுவர் அறிவிற் சிறந்தவளாகவும், தன்னை விரும்பி, கணவனாக ஏற்றுக் கொள்பவளாகவும் ஒரு பெண்ணைத் தேர்தெடுக்கத் திட்டமிட்டார். மணலை முடிச்சுப் போட்டுக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து வந்தார். இந்த மணலை வாங்கிக் கொண்டு சாதம் சமைத்து எனக்கு அளிக்கும் ஒரு நல்லாளைத் தேடுகின்றேன் என்றார். எவரும் அதில் உள்ள நுட்பத்தை உணரவில்லை. வாசுகி அறிவு நுட்பத்தால் இந்த மறைபொருளை உணர்ந்து கொண்டாள். மேலும் வள்ளுவரை மணந்து கொள்ளவும் முடிவு கொண்டாள். நான் உங்களுக்குச் சோறு சமைத்துப் போடுகிறேன் என்று மணலை முறத்தில் வாங்கிக் கொணடாள். அதைக் கொட்டிவிட்டு அரிசி போட்டுச் சமைத்து, சாப்பாடு போட்டாள். திருவள்ளுவருக்கு இதனால் அவள் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்டாள் என்பது உணரப் பெறுகிறது. அதற்காகவே கையாண்ட தந்திரம்தான், மணல் முடிச்சு என்பதை உணர்ந்து, அதைப் பெற்றுக் கொண்டதனால், அவள் அறிவுக் கூர்மை உணரப் பெறுகிறது. இந்த இரண்டு தகுதிகளையே எதிர்பார்த்தார் திருவள்ளுவர். அத்தகுதியுள்ள ஒருத்தியைத் தேர்ந்து திருமணம் முடித்து இல்லறம் ஏற்றார். இவ்வாறு தான் அந்தக் கதையின் கருத்து இருக்க வேண்டும் என்று நான் விளக்கினேன்.
சித்து விளையாடல் மூலம் ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியும், இல்லாத பொருளை வரவழைத்தும் சிலர் காட்டுவார்கள். நாம் பார்க்கிறோம். இவ்வாறு வாசுகியம்மைறாரும் செய்திருக்கலாமல்லவா? எனச் சிலர் எண்ணலாம். சித்து என்பது ஒருவர் பிறரை, ஏமாற்றும், ஏய்க்கும், ஒருவித கலையாகும். இது அறிவின் உயர்வின்பாற் பட்டதல்ல. ஆன்மீக வளர்ச்சியின் உயர்வின் எடுத்துக் காட்டுமல்ல. அம்முறையில் வாசுகி செய்திருந்தால் வள்ளுவர் அவளை மணந்திருக்க மாட்டார். ஏன்? அவர் அறிவிற் சிறந்தவர். மெய் விளக்கம் பெற்றவர். இவ்வகையில் விரிந்த என் விளக்கம் கேட்டு இருவரும் அமைதி பெற்றனர். இந்தக் கவிகளையும் பிறகு அச்சடித்து அப்போது வெளியிட்டேன். பலர் படித்து மகிழ்ந்தார்கள்.
என் வாழ்நாட்கள் எல்லாம் சிந்தனையிலேயே கழித்து வந்தேன். சிந்தித்த முடிவுபடி செயல்புரிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனினும் பொதுவாக மனித இயல்பான மயக்கமும் அவ்வப்போது எழத்தான் செய்தது. எப்போதோ ஒரு செயல் பழக்கத்தின் வழியே நடந்து தவறான விளைவுகளையும் தரும்.
நான் செய்த இரண்டு கொடுமைகள்
என் வாழ்விலே நான் மறக்க முடியாத தவறாக இரண்டு கொடுமைச் செயல்களைச் செய்துவிட்டேன். அவை உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சினத்தின் எழுச்சியால் விளைந்தவை.
நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. ஒரு சிறு பையன், எட்டு வயது இருக்கும். அவன் மட்டித் தனமாக இருந்தான். அவன் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லையென்று, பிரம்பினால் கைபோனபடி கீழும் மேலும் திருப்பித் திருப்பி விளாசி விட்டேன். அந்தக் குழந்தை பதை பதைத்து அழுத காட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. “சார்! சார்! வலிக்கிறது சார்! தாங்க முடியவில்லை சார்” என்று அவன் கெஞ்சிய கூச்சலில், என் மனம் உடனே விழிப்பு நிலை பெற்றது. உடனே அவனை அணைத்துக் கொண்டேன். மற்ற குழந்தைகள் எல்லோரும் எங்களையே பார்க்கின்றனர். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது. பிரம்பை வீசி எறிந்து விட்டேன். இனிமேல் நன்றாக படியப்பா. நான் அடிக்க மாட்டேன். நன்றாகக் கற்றுக் கொடுக்கிறேன் என்று, பாடம் சொல்லத் தொடங்கினேன். இடது கையால் அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டு அவன் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தில் வலக்கை விரலால் எழுத்துக்களைக் காட்டிப் பாடம் சொன்னேன். எனது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. குரல் கம்மிவிட்டது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுச் சற்று முன்னதாகவே வீட்டுக்குப் போய் விட்டேன். அன்று முழுவதும் எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை, என் கைப் பிரம்பு. இரக்கமற்ற முறையில் நான் கொடுத்த அடி, அந்தக் குழந்தைக்கு நான் அன்று செய்த கொடுமை, திருப்பித் திருப்பி என் மனதை வாட்டியது. அன்று இரவு எனக்கு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அன்று முதல் குழந்தைகளை நான் அடிப்பதே இல்லை. அது மாத்திரம் இல்லை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் அன்பு பாராட்டத் தொடங்கினேன். இது ஒரு கொடுமை. நான் என்னை மறந்து சினத்தால் ஆற்றியது.
என் வயது முப்பத்தி ஏழு. அப்போது ஒரு கொடுஞ்செயல் செய்துவிட்டேன். எனது இளைய மனைவி இலட்சுமி நான் குளிக்கும் இடத்திற்கு உடம்பு தேய்க்க வந்தாள். மார்கழி மாதம். குளிர் நடுங்குகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் நான் முதலில் தண்ணீரைத் தொட்டு உடல் முழுக்கத் தேய்த்துச் சிறிது தோலுக்கு உணர்ச்சி மாற்றம் ஏற்பட செய்து, பிறகே குவளையினால் நீர் எடுத்துத் தலையிலும், உடம்பிலும் ஊற்றுவேன். அதுபோல் சிறுகச் சிறுகத் தண்ணீர் எடுத்து உடம்பில் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் இலட்சுமி, கையில் ஒரு வாளி எடுத்து நீர் நிறைய மொண்டு ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள். ஒரு வாளி ஒரே தடவையாக ஊற்றினால் குளிர் தெளிந்துவிடும் என்று தலையில் ஊற்றிவிட்டாள். எனக்கு தாங்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டது. சினம் மீறி விட்டது. குளிர் எப்படி இருக்கிறது என்று நீ பார் என்று நான் ஒரு வாளி தண்ணீரை மொண்டு அவள் தலையில் அப்படியே ஊற்றி விட்டேன். அவள் ஒன்றுமே பேசவில்லை. சிலைபோல் நின்றுவிட்டாள். தலையில் ஒழுகும் தண்ணீரை வழித்துவிட்டுக் கொண்டாள். ஆனால், அவள் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது. முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விக்கினாள். அவளுக்குக் குளிர் ஏற்படச் செய்தது, அப்படி ஒன்றும் கொடுமை அல்ல. அவள் தன் கணவன் என்ற உரிமையில் விளையாட்டாக என் மீது குளிர்ந்த நீரை ஊற்றினாள். ஆனால் அவள் புண்படும் வகையில், நான் சினம்கொண்டு அவளிடம் நடந்துகொண்ட விதம், மிகவும் கொடுமை என உணர்ந்தேன். உடனே அவளுக்கு ஆறுதல் கூறினேன். எனினும் எனக்கு மட்டும் ஆறுதல் கிட்டவில்லை. இத்தகைய முறையில் சினம் எழாமல் காக்க முனைந்தேன். பல வழிகளைப் பின்பற்றினேன். அதன் தொடரில் வந்த சிந்தனைத் தெளிவே, அறுகுணச் சீரமைப்பு என்ற ஒரு பெரிய உலக நலக் கருத்து உருவாகியது. தற்சோதனை எனும் உளப்பயிற்சி முறை உருவாயிற்று.
தவறு செய்தல் எல்லோருக்கும் இயல்புதான். சிந்தனை ஆற்றல் இல்லாதவர்கள். அந்தத் தவறுகளைப் பெருக்கிக் கொண்டே போவார்கள். சிந்தனைத் திறன் உடையவர்கள் தவறு செய்து விட்டால் அதன் விளைவைக் கணித்து, தாம் இனி அத்தவறு செய்யாத விழிப்பு அடைவதோடு, மற்றவர்களும் இத்தகைய தவறு புரியாமலிருக்க என்ன வழியுண்டு என்று ஆராய்ந்து முடிவு கண்டு, பயன் விளைப்பார்கள். இத்தகைய முயற்சியிலே விளைந்த கவி இங்கே படியுங்கள்.
“அறிவைப் புலன்களில் அதிக நாள் பழக்கினேன்
அதன்பயன் உணர்ச்சிகள் அறிவை வென்றன
அறிவை யறிவால் ஆராயப் பழகினேன்
அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்
அறிவு அகண்டா காரத்தில் நிலைபெற
அதிக விழிப்பும் பழக்கமும் பெற்றது
அறிவு புலன்களை அறிந்தது வென்றது
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்”.

No comments:

Post a Comment